Friday, February 3, 2012

`பம்பரக்` கண்ணாலே!

`பம்பரத்தைப்`படைத்தவன் நிச்சயம் ஒரு `ஞானி`யாகத்தான் இருக்க வேண்டும்!.எவ்வளவு யோசித்தாலும்,அதை விட ஒரு அழகான விளையாட்டுப் பொருளை,என்னால் கற்பனை செய்ய இயலவில்லை!.இப்பொழுதெல்லாம் ...இது போல விளையாட்டுகளை எல்லாம் விட்டு விட்டு,அப்பார்ட்மென்ட் வீடுகளில்,தனித்தனியாக `வீடியோ கேம்`விளையாடிக் கொண்டிருக்கும்,சோடாபுட்டிக் கண்ணாடி சிறுவர்களைப் பார்க்கையில் வருத்தமே மிஞ்சுகிறது.


என் பத்து வயதில்தான் பம்பரம் எனக்குப் பரிச்சயமானது.முழுப் பரீட்சை லீவு ஆரம்பிக்கும் ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே,பம்பர சீசனும்`ஆரம்பித்து ,ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் பாக்கெட் மணி எல்லாம்,சேமிப்பாகி `பம்பரமாக`உருமாறி விடும்!.பம்பரத்தை புதிதாக எளிதில் கடைகளில் வாங்கி விடலாம்,ஆனால் அதை நமக்கு ஏற்றவாறு `கண்டிஷனில்`கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல.


முதலில் நமக்குப் பிடித்த வடிவத்தில்,அளவில் அது கிடைக்க வேண்டும்.அதில் பெயருக்கு `ஆணி`என்று ஒரு கம்பியை செருகி இருப்பார்கள்.அதை அப்படியே சுற்றிவிட்டால்...`தைய்யா தக்கா` என்று அங்கும் இங்கும் குதிக்குமே தவிர,ஒரே இடத்தில் நின்று `பூ` போல சுற்றாது.தவிர சுழலும் போது,கையில் எடுத்தாலும்...கம்பி கையைப் பதம் பார்த்துவிடும்!.ஆக...பம்பரம் வாங்கியதும் முதல் வேலை ஆணி போடுவதுதான்.சுவற்றில் அடிக்கும் மொளுக்கட்டை ஆணியை அடித்தால்...பம்பரம் வாயைப் பிளந்து விடும்!ஆகவே திருகும் வசதி உள்ள ,`ஸ்க்ரூ ஆணிதான்(!)` இதற்குத் தோதானது!


அடுத்து ஒருவழியாக...ஆணியை ஸ்க்ரூ செய்தபின்...லேத் வைத்திருக்கும் `மாரி` அண்ணனிடம் கொடுத்து,ஆணியின் தலைப் பகுதியை வெட்டி வாங்கி...பின் வெட்டுப்பட்ட இடத்தைத்  தரையில் தேய்த்து ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவோம்.


இப்ப பம்பரம் ரெடி...அடுத்து... `சர்டிபிகேட்`!.இது எங்களைவிட சீனியரான பத்தாம் வகுப்புப் படிக்கும் மணி அண்ணன்தான் தருவார்!ஆகவே பம்பரம் ரெடியானதும் நாங்கள் நேராகச் செல்வது...மணி அண்ணன் வீட்டுக்குத்தான்.அவர் பம்பரத்தை வாங்கி கொஞ்ச நேரம் அதன் வடிவத்தை ஆராய்ச்சி(?!) செய்வார்,பின் சாட்டையால் சொடுக்கி சுழலவிட்டு கொஞ்சம் ஆராய்ச்சி(?!),...அடுத்து,அது சழன்று கொண்டிருக்கும் போதே,ஆள்காட்டி விரலுக்கும்,நடு விரலுக்கும் நடுவே பம்பரத்தை ஏற்றி,லாவகமாக உள்ளங்கைக்கு கொண்டு வந்து விடுவார்!இப்பொழுது பம்பரம் அவர் உள்ளங்கையில் அழகாக சுழன்று கொண்டிருக்கும்... மறுபடியும் கண்ணின் அருகே வைத்து `ஆராய்ச்சி`(?!)தொடரும்...ஒரு வழியாக பம்பரம் சுற்றி நிற்கும் முன்..."ம்ம்ம்...நல்லா `பொங்கு`ன்னு இருக்குடா!"என திருவாய் அருள்வார்...!இதுதான்...இதேதான்!... இந்தப் "பொங்கு ன்னு இருக்குடான்னு"சொல்வதுதான் எங்களுக்கு ஐ.எஸ்.ஓ சர்டிபிகேட்!....அவர் எதிர்பார்க்கும் தரத்தில் பம்பரம் இல்லை என்றால்...அவரின் ஆலோசனைப் படி `பக்குவப்`படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப் படும்!...நாலைந்து முறை அலைந்தும்,மணி அண்ணனின் சர்டிபிகேட் கிடைக்காமல் அலைந்தவர்கள் எல்லாம் நிறைய இருக்கிறார்கள்!


சரி..பம்பரம் ஒருவழியா செட் ஆகிடுச்சு!...இனி அடுத்து `டோர்னமென்ட்`தான்...கிரிக்கெட்டில் `ரன்`எடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்,பம்பர விளையாட்டில் `அபீட்`எடுப்பது!...சுழன்று கொண்டிருக்கும் பம்பரத்தை ,சாட்டையால் லாவகமாகச் சொடுக்கி,மேல எழும்பும் பம்பரத்தை,கீழே நழுவ விடாமல்,`கேட்ச்`செய்வதுதான் ...`அபீட்!`


குழுவாக விளையாடுகையில் `அபீட்`எடுக்கத் தாமதம் செய்பவனின் பம்பரத்தை,வட்டத்தின் நடுவில் வைக்க வேண்டும்!.அப்புறம் என்ன...எல்லோரின் பம்பரத்தின் ஆணியும்,வட்டத்தில் இருக்கும் பம்பரத்தைக் குத்திக் குதறி...சொறி பிடித்தால் போல செய்துவிடும்...!சமயத்தில் பிளந்தும் விடும்...ஆனால் நாங்கள் இதற்காக சளைத்தது இல்லை...புதுப் புது பம்பரங்கள்...புதுப் புது முயற்சிகள்!


இப்படியான ஒருநாளில்,விளையாட்டு முடிந்து...பம்பரத்தையும்,சாட்டையையும் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவாறே சட்டென ,கோயிந்து என்ற கோவிந்த ராஜுவிடம் கேட்டேன்...
"எண்டா...இந்தப் பூமி எப்பவும் சுத்திகிட்டே இருக்கே...இதை எவ்வளவு பெரிய `சாட்டை`வைத்து யாருடா சுத்தி விட்டு இருப்பாங்க?"


அவித்த மரவள்ளிக் கிழங்கை மென்று கொண்டிருந்த கோயிந்து...என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்க்க ...நான் கிழங்கு மென்று கொண்டிருந்த,அவன் வாயையே பார்த்துக் கொண்டிருக்க, அண்ணாந்து ஆகாயம் பார்த்த கோயிந்து கிழங்கை சாவதானமாக விழுங்கி விட்டுச் சொன்னான்....
"வேற யாரு?...பெருமாள் சாமிதேன்!"


சமகாலத்தில் இருந்து கொண்டு இந்தப் பால்ய நினைவுகளை `ரீவைண்ட்`செய்து பார்க்கிறேன்...நான் படித்த பெளதிக (Physics)கல்விக்கும்...இன்றளவில்...கோள்கள்,வானவெளி பற்றிய தகவல்கள் அறியும் என் ஆர்வத்திற்கும் அந்தப் `பம்பர`விளையாட்டுதான் விதையாகி இருந்திருக்கக் கூடும்!..கோயிந்திடம் கேட்ட கேள்வியை,மறுபடியும் இன்னும் சரியான நபர்களிடம் கேட்டிருந்தால் ..ஒருவேளை இன்னும் நான் சரியான பாதையில் பயணித்திருக்கலாம்!


இதைப் படிக்கும் நண்பர்களுக்குக் குழந்தைகள் இருப்பின்...அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம் இதுதான் ..உங்கள் குழந்தைகளை சக குழந்தைகளோடு விளையாட விடுங்கள்!..அவர்கள் அதிகம் கேள்வி கேட்க அனுமதியுங்கள்!....மறுபடியும் சொல்கிறேன்,யாரையும் கேள்வி கேட்காமல்...யாரையும் தொல்லை செய்யாமல் தனிமையில்`வீடியோ கேம்`விளையாடும் குழந்தைகள்... நிச்சயம் `சமர்த்துக்` குழந்தைகள் அல்ல!..இன்று குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் `தனிமையை` நாளை உங்களுக்கும் அதே குழந்தைகள் தரக்கூடும்!


எல்லாம் சரி...கோயிந்து என்ன செய்கிறான் என்கிறீர்களா?...அன்பான மனைவி,குழந்தைகள்,அரசு வேலை என வாழ்கிறான்!.அதுமட்டுமல்ல அவனுக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை எல்லாம் `பெருமாளின்`அருள் என்றே இன்றளவும் நம்புகிறான்!.குடும்ப வாழ்க்கையில் திருப்தி என்றாலும்..இன்னும் ஆன்மீக வாழ்வில் எதையோ தேடுகிறான்...வருடத்தில் ஒருமுறையாவது `காசி``ராமேஸ்வரம்``பத்ரி நாத்``கேதார்நாத்`என ஏதாவது ஒரு யாத்திரை  சென்று விடுகிறான்!.அவன் தேடுதல் நிச்சயம் `பெருமாளை`ஊனக் கண்ணால் காண்பதாக இருக்கலாம்!..அவன் பார்த்தால் நிச்சயம் எனக்குச் சொல்வான்!...நானும் உங்களுக்குச்சொல்கிறேன்! 

Saturday, December 17, 2011

`ஜூனி&சீனி`

ஜூனி&சீனி`...ஒரு அறிமுகம்:- ஜூனியரும்,சீனியரும் நம் `நாக்கு அவுட்!`பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர்கள்!.சுருக்கமாக ஜூனி...சீனி!.காற்றுப் புக முடியாத இடத்திலும் நுழைந்து விடும்,அசகாய சூரர்கள்! எளிதில் பேட்டி தராத அரசியல் தலைவர்களைக் கூட,சமார்த்தியமாக..வாயைக் கிண்டி பேசவைத்து விடுவார்கள்!.இதோ,நம் `நாக்கு அவுட்`பத்திரிக்கையின் வாசகர்களுக்காக(?! )எதற்குமே அசைந்து கொடுக்காத,நம் பிரதமரின் பிரத்தியேக பேட்டி!.இது முழுக்க,முழுக்க ஒரு கற்பனை பேட்டிதான் என்றாலும்,வருங்காலத்தில் இது நிஜமானால்,அதற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!.மேலும் இது முழுக்க முழுக்க,ஒரு சீரியஸ் பேட்டி என்பதால்,உங்கள் முகத்தையும்...கொஞ்சம் `சீரியசாகவே`வைத்துக் கொள்ளவும்!...ரெடி!...ஸ்டார்ட் மியூசிக்...!!! 


சீனியாரிட்டி அடிப்படையில் சீனியரே பேட்டியை ஆரம்பிக்கிறார்.... 
சீனி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தது ஏன்?பிரதமர்: அது....இந்தியாவை விரைவில் வல்லரசாக்கும்,எங்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம்!.ஆனால் துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதியால்,நாங்கள் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்க வேண்டியதாக ஆகி விட்டது!.
சீனி:.அதெப்படி சில்லறை வர்த்தகத்தின் மூலம்,வல்லரசு ஆக முடியும்?அதுவும் விரைவில்?.
பிரதமர்: வெரி சிம்பிள்...இந்தத் திட்டப்படி,ஏற்கனவே வல்லரசாக இருக்கும்...நாடுகளுக்கு மட்டுமே நாங்கள் அனுமதி தருவோம்!,கொஞ்ச நாள் வியாபாரத்தில் அவர்கள்,எப்படியும் நம்மை அடிமைப் படுத்தி விடுவார்கள்...நாம் ஒரு வல்லரசு நாட்டின்`கண்ட்ரோலில்` இருக்கும் பொழுது,நாமும் ஒரு வல்லரசுதானே?முடிவுகளை யார் எடுத்தால் என்ன?...இப்பொழுது நான் எடுக்கும் எல்லா முடிவுகளும்,என்னுடையதா என்ன?(பிரதமரின் இந்த அதிரடி எதிர்க் கேள்வியால் சீனியின் பல்ஸ் எகிறுகிறது...அவரை ஆசுவாசப் படுத்தி விட்டு ஜூனி,கேள்விகளைத் தொடர்கிறார்...)
 ஜூனி: அண்ணா ஹசாரே?...
பிரதமர்: ஹேஹே...அவரைத்தான் இப்பொழுது எங்களைப்போல,`காமெடி பீசு` ஆக்கிவிட்டோமே!.
ஜூனி : சரி...சார்...தமிழகப் பிரச்சினைகள் பற்றி...முல்லைப் பெரியாறு பிரச்சினையை,நீங்கள் மனது வைத்தால் தீர்த்து விடலாமே?கேரளாவில்...உங்கள் கட்சியின் ஆட்சிதானே நடக்கிறது?.
பிரதமர்: எது?...கேரளாவில் எங்கள் கட்சியின் ஆட்சியா நடக்கிறது?வழக்கமாக அங்கே,கம்யுனிஸ்டுகள் ஆட்சி தானே நடக்கும்?அப்போ...உம்மன் சாண்டி காங்கிரஸ் ஆளா?(பிரதமர் உதவியாளரைப் பார்க்கிறார்...அவர் கூகுளில் தேடி,அரை மனதோடு `ஆமாம்`என்பது போல தலை ஆட்டுகிறார்!)...நீங்களே பாருங்கள்...இந்தத் தகவல் எல்லாம்,நானாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!என் கவனத்திற்கு நீங்கள் கொண்டுவந்ததற்கு நன்றி!...
விரைவில்...அணையை உடைத்து விடலாம்!...குறுக்கே அணை இருப்பதால்தானே,தமிழகதிற்கு வர வேண்டிய தண்ணீரை அவர்கள் தடுக்கிறார்கள்!?...
(இப்பொழுது ஜூனி டென்சன் ஆகிறார்...சீனி ஆல்ரெடி அரை மயக்கத்தில் இருப்பதால்,ஜூனியே சுதாரித்து தொடர்கிறார்!).
ஜூனி: தமிழக முதல்வர் தங்களுக்கு,தமிழகப் பிரச்சினைகள் குறித்தும்,மத்திய அரசு உதவி கேட்டும் பல கடிதங்கள் தங்களுக்கு எழுதியும்,தாங்கள் ஏன் இதுவரை ஒரு பதில் கூட எழுதவில்லை?...
பிரதமர்: அந்தக் கடிதங்கள் எல்லாம்,முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதப் பட்ட,தமிழ் கடிதங்களாக இருப்பதால்,எங்கள் அலுவலகத்தில்...அதை,இந்தியில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்...கூடிய விரைவில்,ஏதாவது ஒரு இந்திய மொழியில்,பதில் எழுதி விடுவோம்!.
ஜூனி: அலைக்கற்றை ஊழலில்,இப்பொழுது உள்துறை அமைச்சர்,சிதம்பரம் பெயரும் அடிபடுகிறதே?!
.பிரதமர்: சிதம்பரத்தின் நேர்மையை நான் முழுக்க,முழுக்க நம்புகிறேன்!மேலும்...பிரணாப் முகர்ஜி,கபில் சிபல் எல்லோரும் அவ்வாறே நம்புகிறார்கள்...நான்தான் சிதம்பரம் நல்லவர் என்று சர்டிபிகேட் தருகிறேனே!.
ஜூனி: இப்படித்தான்...உங்கள் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும், `சர்டிபிகேட்` தந்தீர்கள்?!!!.
பிரதமர்: ராசா விஷயம் வேறு...ஆனால் சிதம்பரத்திற்கு ஞாபக மறதி என்பது...நாட்டிற்கே தெரியுமே!.,அவர் எதோ ஒரு ஞாபக மறதியில் எடுத்த,ஒரு முடிவை...நாம் பெரிது படுத்தக் கூடாது!
ஜூனி: தமிழக காங்கிரஸ் பற்றி?...
பிரதமர்: தம்பி...தமிழக காங்கிரஸ் பற்றி...சீரியசாக சொல்வதற்கு ஒன்றுமில்லை!காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் இருக்கின்றன,அதில் முழுக்க முழுக்க மக்களை மகிழ்விக்க நாங்கள் அமைத்த ஒரு கலைக் குழுதான் தமிழகக் காங்கிரஸ்...பல்வேறு பிரச்சினைகளில் இருக்கும் மக்கள்...சிரித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே அமைக்கப் பட்டது அது!.எந்நேரமும் இருக்கும் சீரியசான அரசியலில்,எங்களுக்கும் ரிலாக்ஸ் தருவது இவர்கள்தான்!.இந்த விஷயத்தில் தமிழக மக்கள்...நீங்கள்தான் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!.இப்பொழுது நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஞான தேசிகன் அவர்களும்,தங்க பாலுவிற்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல...அவரும் அவர் பங்களிப்பாக,காமெடி அறிவிப்புகள் மூலம் உங்களை எல்லாம் மகிவிப்பார் என,நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்!
சீனி: அதெல்லாம் சரி சார்...கோஷ்டி சண்டை இல்லாத சத்திய மூர்த்தி பவனை தமிழக மக்கள் எப்பொழுது பார்ப்பது?
(இந்தக் கேள்விக்கு,பிரதமர் ஜூனி&சீனி இருவரையும் குறுகுறுவெனப் பார்க்கிறார்...பின் அவர் உதவியாளரைப் பார்க்கிறார்...அவரோ முகத்தைத் திருப்பிக் கொள்ள,மறுபடியும் வேறு வழி இல்லாமல் ஜூனி&சீனி பக்கம் பார்வையைத் திருப்பி,அவர்களையே வெறித்துப் பார்க்கிறார்...ஏறக் குறைய நாயகன் படத்தில்,நிழல்கள் ரவி இறந்ததும் கமல் கதறி அழுவாரே,அது போல ஒரு முக பாவனைக்கு வருகிறார்!...என்றாலும் கொஞ்ச நேரத்தில் சுதாரித்து,நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தி,கண்களை மூடிக் கொள்கிறார்...ஏறக்குறைய ஒரு ஆழ்நிலை...தியான நிலைக்கு சென்றுவிட்ட அவரை,அதற்கு மேலும் கேள்விகள் கேட்டு தொல்லைப் படுத்தாமல்,ஓசையின்றி வெளியேறுகிறது ஜூனி&சீனி டீம்!)......


நண்பர்களே!... அரசியலில் சம காலத்தில்,எல்லா முக்கிய விஷயங்களிலும்,நம் பிரதமர் வாயே திறக்காமல்,எந்த ஒரு திடமான முடிவும் எடுக்காமல் இருக்கிறார் என்ற உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு...அதன் விளைவே இந்தக் கற்பனை கேள்வி பதில்கள்..!

Saturday, August 13, 2011

`முன்னூட்டம்`

அடடே!... நானும் BLOG-எழுத ஆரம்பித்து,அதற்க்கு `தலைப்பும்` வைத்து விட்டேனே!.இது அய்யனார்ஸ் ..`கலைடாஸ்கோப்`!. நான் பார்த்த,என்னை பாதித்த மனிதர்களையும்,சம்பவங்களையும்,நான்பார்த்தவாறே உங்களுக்கும் காட்ட நினைக்கும் ஒரு விபரீத முயற்சியும் கூட! இதில்,இதைப் படிக்கும் நீங்கள் கூட இருக்கலாம்!.இனி நீங்களும் ரசிக்க,என் கலைடாஸ்கோப்பை,உங்கள் கண்களுக்குத் தருகிறேன். சமயத்தில் ...நான் காணாத காட்சிகள் கூட, உங்கள் கண்களுக்கும்,கருத்துக்கும் தெரியலாம்!.காட்சிகளை மாற்றி,மாற்றிப் பார்த்து ரசியுங்கள்.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாருங்கள்...ஆனால் தயவு செய்து,..இவ்வளவு அழகான பிம்பங்களைத் தருகிறதே!..உள்ளே என்னதான் வைத்திருப்பான் இவன்? ...என ஆராயும் நோக்கில்,இதை உடைத்துப் பார்த்து விடாதீர்கள்..காரணம் உள்ளே இருப்பது கூட ஏற்கனவே `உடைந்த விஷயங்கள்தான்!`......(காட்சிகள் தொடரும்!....)