Thursday, March 29, 2018

சில நாட்களுக்கு முன் ,நண்பர் ஒருவர் கேட்டார்...
"ஒரு நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும்?"

என்னால் உடனே இதற்கு ஒரு வரையறை தர இயலவில்லை...ஆனாலும்,பொதுவாக சொன்னேன்.."எளிமையாக...வாசிக்கும் எல்லோருக்கும் புரியும்படியாக...அதே நேரத்தில் ஒரு தீர்க்க தரிசனத்தோடு இருக்க வேண்டும்"

"அதென்ன தீர்க்க தரிசனம்?!"

இதற்கும் உடனே ஒரு உதாரணத்தை என்னால்  அவருக்கு சுட்டிக் காட்ட இயலவில்லை...என்றாலும்,மறுபடியும் பொதுவாக சொல்லி வைத்தேன்...
"...ம்ம்ம்...அதாவது,அந்த எழுத்தானது எழுதப்பட்ட காலத்திற்கு பிறகும்...எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்"

இந்த பதிலில் எனக்கு திருப்தி இல்லைதான்...சரியான ஒரு உதாரணதோடு உடனே அவருக்கு இதை ,தெளிவாக விளக்க முடியவில்லையே என்பதால்...

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு...மனதிற்கு பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படிப்பது...மனதிற்கு பிடித்த  பெண்ணை  மீண்டும் மீண்டும் புணர்வது போல..!

அப்படியான ஒரு இச்சையில் நான் மீண்டும் வாசிக்க நேர்ந்தது..."பொன்னியின் செல்வனை"
பல நாட்களுக்கு முன்னர்,நண்பர் கேட்ட...அந்த "தீர்க்க தரிசனம்"என்ற கேள்விக்கு இப்போது ஒரு தெளிவான உதாரணம் கல்கியின் எழுத்துக்களில் இருந்து கிடைத்தது...
பொன்னியின் செல்வன் வெளியான காலம்..1951-1954 கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்னர்!

கதையில்... பொன்னியின் செல்வனுக்கும்,வந்திய தேவனுக்கும் இடையே ஒரு உரையாடல் ...
இலங்கையில்...புத்த மத குருமார்கள்,பொன்னியின் செல்வனுக்கு. இலங்கையின் சிம்மாசனத்தை வழங்க தாமாக முன்வருகிறார்கள்...பொன்னியின் செல்வர் புத்த மத குருமார்களின் கோரிக்கையை மறுத்து விடுகிறார்...பின்னர்,பொன்னியின் செல்வனிடம் இது குறித்து வந்தியத் தேவன் வினா எழுப்ப, இந்த உரையாடல் நிகழ்கிறது...அதை கல்கி அவர்களின் நடையில் அப்படியே தொடர்க...
.......
“ஆமாம், ஐயா! ஆமாம்! நான் எதற்கும் தகுதி வாய்ந்தவன் தான். ஆனால் இந்த நாளில் தகுதிக்கு யார் மதிப்புக் கொடுக்கிறார்கள்? அந்த பிக்ஷுக்கள் இந்த இலங்கா ராஜ்யத்தின் கிரீடத்தை எனக்குக் கொடுத்தார்களா? வேண்டாம் என்று மறுதளிக்கக் கூடிய தங்களைப் பார்த்துத்தானே கொடுத்தார்கள்? அப்போது எனக்கு என்ன ஆத்திரம் வந்தது தெரியுமா? கிரீடத்தைத் தூக்கி என் தலையில் நானே சூட்டிக் கொண்டு விடலாமா என்று பார்த்தேன்! இந்த வீர வைஷ்ணவர் போட்டிக்கு வந்து விடுவாரே என்று சும்மா இருந்து விட்டேன்!”

இதைக் கேட்டதும் அருள்மொழிவர்மர் கலகலவென்று உரத்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு வந்தியத்தேவன் உள்ளம் மகிழ்ந்தது. வெளிப்படையில் மேலும் கோபத்தைக் காட்டி, “சிரித்தால் மட்டும் சரியாகப் போய் விட்டதா? செய்த தவறுக்குப் பரிகாரம் என்ன?” என்றான்.
“ஐயா! வாணர்குல திலகமே! சத்தியம், தர்மம் என்று சொன்னேனே! சிம்மாசனம் வேண்டாம் என்று மறுத்ததற்கு அவை சரியான காரணங்கள் என்று தங்களுக்குப் படவில்லையா?”

“சத்தியம், தர்மம் இவற்றின் பேரில் ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் சபலம் இருந்தது. இனிமேல் அவற்றின் முகத்திலேயே விழிப்பதில்லை, எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.”

“அடாடா? ஏன்? எதற்காக அப்படிப்பட்ட முடிவு செய்தீர். அவற்றின் பேரில் என்ன கோபம்?”
“கோபம் ஒன்றுமில்லை சத்தியம், தர்மம் என்னும் கன்னியர் மீது தாங்கள் காதல் கொண்டுவிட்டதாகச் சொல்லவில்லையா? அதற்காக இந்த இலங்கா ராஜ்யத்தைத் தியாகம் செய்ததாகவும் சொல்லவில்லையா? வேறொருவர் காதலித்த பெண்களை நான் மனத்தினாலும் நினைப்பதில்லை!”

பொன்னியின் செல்வர் மறுபடியும் கடகடவென்று சிரித்தார். “உம்மைப்போல் வேடிக்கைக்காரரை நான் பார்த்ததே இல்லை!” என்றார்.

“ஆம், ஐயா! தங்களுக்கு வேடிக்கையாயிருக்கிறது. எனக்கு வயிறு எரிகிறது. இலங்கைச் சிம்மாதனம் தங்களுக்கு வேண்டாம் என்றால், பக்கத்தில் நான் நின்றேனே, என் பக்கம் கைகாட்டி ‘இவனுக்குக் கொடுங்கள்!’ என்று சொல்லியிருக்கக் கூடாதா?” என்றான் வந்தியத்தேவன்.
அருள்மொழிவர்மர் சிரித்து ஓய்ந்த பிறகு, “வந்தியத்தேவரே! இராஜ்யத்தை ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிய காரியமா? அதிலும் புத்த பிக்ஷுக்கள் கொடுத்து ஏற்றுக்கொள்வது சிறிதும் முறையல்ல. பின்னால் பெரிய விபரீதங்களுக்கு இடமாகும்..
"மதத்தலைவர்கள் மத விஷயங்களுடன் நிற்க வேண்டும். மதத் தலைவர்கள் இராஜரீக காரியங்களில் தலையிட்டால் மதத்துக்கும் கேடு; இராஜ்யத்துக்கும் கேடு". மேலும் இன்று எனக்குச் சிம்மாசனம் கொடுக்க வந்த புத்த பிக்ஷுக்கள் இந்த நாட்டிலுள்ள எல்லா புத்த மதத்தாருக்கும் தலைவர்கள் அல்ல. இவர்கள் ஒரு கூட்டத்துக்குத் தலைவர்கள். இவர்களுடைய சங்கத்தைப்போல் இன்னும் இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. இவர்களிடம் நாம் இராஜ்யத்தை ஒப்புக் கொண்டால் இவர்களுடைய இஷ்டப்படி இராஜ்யம் ஆளவேண்டும். மற்ற இரு சங்கத்தாரும் உடனே நம் விரோதிகள் ஆவார்கள்!” என்றார்.
“வல்லத்து இளவரசருக்கு இப்போது இவ்விடத்து நிலைமை புரிந்ததா?” என்றான் ஆழ்வார்க்கடியான்.

“புரிந்தது, புரிந்தது! அங்கே விஷ்ணு பெரியவரா, சிவன் பெரியவரா என்று சண்டை போடுகிற மூடர்களைப் போல் இங்கேயும் உண்டு என்று புரிந்தது!” என்றான் வந்தியத்தேவன்.
“நீங்கள் இங்கே சண்டை ஆரம்பித்து விடாதீர்கள். இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அதோ பெரஹரா ஊர்வலத்திலிருந்து ஜனங்கள் கலைந்து வரும் சத்தமும் கேட்கிறது. இனிமேல் சற்றுத் தூங்கலாம்” என்றார் இளவரசர்.

இப்படியாக அந்த உரையாடல் நிறைவடைகிறது...

"மதத் தலைவர்கள் இராஜரீக காரியங்களில் தலையிட்டால் மதத்துக்கும் கேடு; இராஜ்யத்துக்கும் கேடு!. " 

இதை விடவா  எல்லாக் காலத்திற்கும்  பொருத்தமான ஒன்றை சொல்லி விட முடியும்?!
இதுவே தீர்க்க தரிசனத்தோடு கூடிய எழுத்து....!

அதுசரி..இதை உன் நண்பருக்கு போன் போட்டு சொல்லி ,சிலாகித்து இருக்கலாமே..இங்க வந்து ஏன் சொல்றேன்னு நீங்க யோசிக்கலாம்...அதற்கு காரணம் இல்லாமல் இல்லை...

சம காலத்தில் நாம் அதீதமாக  அனுபவிக்கும் மத மோதல்களுக்கும்,இப்போதைய `காவிரி மேலாண்மை வாரியம்....ஸ்டெர்லைட் ...உட்பட....நாட்டில் நிகழும் எல்லா குழப்பங்களுக்கும்...கல்கியின் அந்த தீர்க்க  தரிசன எழுத்திற்கும் ஒரு கயாஸ் தியரி இருக்கிறது...!
மன்னர் அமைவது வேண்டுமானால் நம் தலைவிதி என்று சகித்துக் கொள்ளலாம் ...ஆனால்,மக்கள் ஆட்சியில்?!
பிழையான தலைமை அமைவதில்,பிழை வாக்காளர்களாகிய நம்மிடமும் இருக்கிறது...பிழை தவறில்லை...பிழையை திருத்திக் கொள்ளாமல் இருப்பதே பெரும் பிழை...பிழை திருத்த்துவோம்...அடுத்த தேர்தலிலாவது!

Wednesday, June 11, 2014

கட்டதொர  : அவனருளாலே அவன் தாள் வணங்கி..ன்னு பாடுறாங்க. அவனருள் கிடைக்கிற வரை வெய்ட் பண்ணனுமா? அப்புறம் ஏன் தியானம் பண்ணனும்றேன்?

இந்த கேள்வியில் இரண்டு விஷயங்கள் வருகின்றன..1)அவனருளாலே அவன் தாள் வணங்கி..என்பதன் பொருள்!
2)அவனருள் இருந்துவிட்டால்,`ஞானம்`அதுவா வந்துட்டுப் போகுது...நாம ஏன் தியானம் அது,இதுன்னு போகணும்ன்னு ஒரு துணைக் கேள்வி!..ரைட்..

1)அவனருளாலே அவன் தாள் வணங்கி..ன்னு சொல்றது ஞானத்தை நோக்கி செல்வதன் ,பல நிலைகளில் ஒரு நிலைன்னு முதல்ல புரிஞ்சுக்கணும்!
இந்த அவனருளாலே அவன் தாள்  வணங்குதல் என்ற நிலை ,முழுக்க முழுக்க `சரணாகதி`நிலையில்தான் வரும்!
அந்த நிலைக்கு வருவதற்கு,முதலில் எல்லாமே அவனருளால் தான் நடக்கிறது..நாம் வெறும் கருவிகள்தான் என்ற  பக்குவ நிலைக்கு  நீங்கள் வர வேண்டும்!
இந்த பக்குவ நிலை எப்படி வரும்?..நம்மை நாமே கவனித்தால் மட்டுமே இந்த பக்குவ நிலைக்கு நாம் வரமுடியும்...அதற்குதான் தியானம் உதவுகிறது!..தியானம் என்பது ஒரு பயிற்சிமுறை..அது,நாம் விரைவில் இந்த பக்குவநிலைக்கு வருவதற்கு உதவுகிறது..அவ்வளவுதான்!

ரைட் ..இப்போ பிராக்டிகல் லைப்ல ஒரு உதாரணம் சொல்றேன்...புரியுதான்னு பாருங்க..நீங்க ,துபாய்ல இருந்து..இங்க வந்து திருப்பதி பாலாஜியை தரிசனம் பண்றதா ஒரு திட்டம்ன்னு வச்சுக்கோங்க...நீங்க நினைத்தால் மட்டும் இது சாத்தியமான்னு யோசிச்சுப் பாருங்க!..நீங்க அங்க இருந்து,கிளம்பி இங்க வந்து தரிசனம் பண்ணிட்டு,வீட்டுக்கு போறதுக்குள்ள எத்தனை பேர் கையில் உங்கள் `உயிர்`(டாக்சி டிரைவர்,விமானி..இப்படி) இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்!..இதெல்லாம் தாண்டி ,நீங்க தரிசனம் செய்ய நினைத்த அன்று..எதோ  ஒரு காரணத்திற்காக தரிசனத்தை ரத்து செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்!...உங்கள் திட்டம் என்னாவது?..இது போல யோசிக்க யோசிக்க... நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்ற தெளிவு வரும்!..
அப்புறம் உங்க கேள்வியில் இருப்பது போலவே , எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் `ஞானம்`வந்துரும் போலன்னு பல பேர் நினைக்கிறார்கள் ..!..இது தவறு...இந்த இடத்துல `ஓஷோவை`துணைக்கு அழைக்கலாம் என நினைக்கிறேன்!
`ஓஷோவின்`வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு..`ஞானம்`அடைதல்...இது பற்றி அவர் சொல்லும் போது,இப்படி சொல்கிறார்..."எனது எல்லா முயற்சிகளையும் கைவிட்ட நிலையில்,
எந்த முயற்சியும் இன்றி `வெறுமனே`இருந்த போது...அது நிகழ்ந்தது..."

இந்த நிலைக்கும்,நீங்க சொன்ன`அவனருளாலே அவன் தாள் வணங்கி`என்ற நிலைக்கும் ஒரு தொடர்பு இருப்பதை கவனியுங்கள்!
அதாவது எதுவமே செய்யாமல் அவர் இருந்த போதுதானே அது நிகழ்ந்தது?!
இப்ப நல்லா கவனிச்சுப் பாருங்க..எல்லா முயற்சிகளையும் கை விட்ட போதுன்னு`ன்னு அவர் சொல்வதை பலரும் .."ஓ! எதுவுமே செய்யாமல் இருந்தால்,ஞானம் அதுவா வந்துரும் போல`ன்னுதான் புரிந்து கொள்கிறார்கள்!
ஆனால் விஷயம் அதுவல்ல...எப்போது ஒருவர் எல்லா முயற்சிகளையும் கை விட முடியும்?...எல்லா முயற்சிகளையும் அவர் செய்திருந்தால் மட்டும்தானே அது சாத்தியம்?  அதாவது,எந்த முயற்சியுமே செய்யாத ஒருவர் ..நான் எல்லா முயற்சியையும் கை விட்டுட்டேன்னு சொல்றது அபத்தமான உளறல்தானே?!

..இதேதான் `அவனருளால் அவன் தாள் `வணங்குதல் என்ற நிலைக்கும்!...

பதிலை ஓரளவு சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்..நீங்க கேட்ட கேள்விகளுக்கான...பதில்களை நீங்க கேட்ட வரிசைப் படி தரவில்லை,..எனக்கு பதில் சொல்லனும்னு தோனுகிற கேள்விக்கு ,எனக்கு தோனுகிற படிதான் பதில் சொல்வேன்...அதை வரிசைபடுத்திக் கொள்வது உங்க பொறுப்பு...சரியா?...இன்னும் உங்க மூணு கேள்வி பாக்கி இருக்கு! ரைட்டா? #பிரேக்!...,;)

Saturday, May 12, 2012

`பிட்டு!`

கம்ப்யூட்டர் `ஹார்ட் டிஸ்க்கில்` இருக்கும் சில பதிவுகள் போல,எளிதில் அழிக்க முடியாத பதிவுகளாக நமது மூளையில் சில நினைவுகள் தங்கி விடுவது உண்டு!. முக்கியமாக நமது பள்ளிப் பருவம்!...அதிலும் குறிப்பாக தேர்வில் `பிட்டு` என்ற `காப்பி` அடிக்கும் அனுபவம்!

அனுபவங்கள்தான் நமக்கு படிப்பினையைத் தருகின்றன!. பிட்டும் அப்படியான ஒரு படிப்பினையைத் தரும் அனுபவம்தான்!
நீங்கள் பிட்டு அடித்த அனுபவம் இல்லாத மாணவனாக இருந்தால்,உறுதியாகச் சொல்கிறேன் ,நீங்கள் ஒரு அழகான அனுபவத்தை இழந்து விட்டீர்கள்!
ஒன்பதாம் வகுப்பு வரும்வரை,நானும் அப்படியான ஒரு அனுபவத்தை இழந்துதான் போனேன்!. ஒன்பதாம் வகுப்பில்தான்,என பூர்வ புண்ணிய `கர்மா`படி ,மனோகரன் சார், எனக்கு வகுப்பு ஆசிரியராக வாய்த்தார்!. மனோகரன் சாரும்,அவர் பிரம்பும் பள்ளியில் அவ்வளவு பிரபலம்!. காரமடை பிரம்பு சகிதமாக,விடைத் தாள்களோடு அவர் வகுப்பில் நுழைந்தாலே,எல்லா மாணவர்களுக்கும்..`பில்டிங்`ஸ்ட்ராங்காக இருந்தாலும்,`பேஸ்மென்ட்`ஆடிக் கொண்டுதான் இருக்கும்!.தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு ஏற்ப அவரின் பிரம்படி அமையும்!. அடிவாங்குவது கூட ,நாங்கள் அவ்வளவு அவமானகரமான ஒரு விஷயமாகக் கருதியது கிடையாது என்றாலும்,எங்கள் வகுப்பு மாணவிகள் முன்னிலையில் அடிவாங்குவதுதான் ஆகப் பெரிய அவமானமாக எங்களைக் கருத  வைத்தது!.

இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் எப்படியோ`பார்டர்`மார்க்கில் பாஸாகி,காலாண்டுத் தேர்வுவரையில்...,மனோகரன் சாரின் பிரம்படியில் இருந்து தப்பித்து வந்தேன்...ஆனால்,அரையாண்டுத் தேர்வு அறிவிப்பு வந்த போது,என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனது!. இதுபோல ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான்,ஒரு சுபயோக சுபதினத்தில்... இனி,`பிட்டே துணை` என்ற `தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தேன்!

தீர்மானம் என்னவோ தீர்க்கமாக எடுத்து விட்டாலும்,அதை வெற்றிகரமாக செயல் படுத்துவது எப்படி என்று,பயமும்..குழப்பமும் ஒருங்கே வந்தது!
அதுவரை `பிட்`அடித்து,`பாஸ்`செய்வதை மட்டுமே `பாசிட்டிவாக`யோசித்த மூளை...,"`பிட்` அடித்து மாட்டிக் கொண்டால்?"..என்று `நெகடிவாக யோசிக்க ஆரம்பித்தது!. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை ...
எங்கள் பள்ளியில்,`பிட்`அடித்து மாட்டிக்கொண்டால் கிடைக்கும் `தர்ம அடி`..தேர்வில் பெயிலானால் கிடைக்கும் பிரம்படியை விட மோசமானது!...பெயிலானால் நம்ம அவமானம்,நம்ம வகுப்போடு முடிந்து போகும்...பிட்டு அடித்து மாட்டிக் கொண்டாலோ,டோட்டலா `ஸ்கூல்` முழுக்க
நம்ம `இமேஜ்`..டேமேஜ் ஆகிடும்!

இருந்தாலும் `ரிஸ்க்`எடுப்பது என்று நான் `தீர்க்கமான`முடிவில் இருந்தபடியால்...அடுத்த கட்ட நடவடிக்கையாக...நான் ஆலோசனைக்காக சென்றது...ஆறாம் வகுப்பில் இருந்தே `பிட்டு`அடித்தே பாஸ் செய்து வந்த அனுபவஸ்தன்...`கோவிந்து`வீட்டுக்குத்தான்!
நான் சென்ற போது,ஆங்கிலத் தேர்விற்கான `பிட்டு`தயாரிப்பில் மும்முரமாக இருந்தான் கோவிந்து!. நான் தயங்கிய படியே,ஒருவாறு விஷயத்தை சொல்லவும்...அவன் ஒரு `மந்தகாசப் புன்னகையோடு...சில,பல `டிப்ஸ்`களை தந்தான்!
அவன் சொல்லச் சொல்ல...உண்மையில் `பிட்டு`அடிப்பது ஒன்றும் அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல என்று தெளிவாகப் புரிந்தது!. இதெல்லாம் நமக்கு சரியா வருமா என,கொஞ்சம் குழம்பி யோசித்த எனக்கு, உடனே தைரியம் சொல்லி ..எக்ஸாம் ஹாலிலும் உதவி செய்வதாக வாக்களித்தான்!

உண்மையில் நீங்கள் நினைப்பதுபோல `பிட்டு`அடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான  விஷயம் அல்ல!.நாலு பக்கக் கட்டுரையை நாலு சென்டிமீட்டர் நீள,அகலம் கொண்ட தாளில் ,நுணுக்கி எழுதுவது சாதாரணமா?!!!. இப்படி எழுதப்பட்ட ,30-40`பிட்டு`களை...உடையில் ஆங்காங்கே பதுக்கி வைத்து,எந்தெந்த கேள்விக்கான விடைகள்,எந்தெந்த `பிட்டில்`..எந்தெந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்றும்..தெளிவாக இருக்க வேண்டும்!. உண்மையில் அபார `ஞாபக`* சக்தி இருந்தால் ஒழிய இது சாத்தியம் இல்லை!.(*இவ்வளவு அபார ஞாபக சக்தியுள்ளவர்களுக்கு `விடைகள்`மறந்து போவது...ஒரு ஆச்சர்ய முரண்!)

அடுத்து எக்ஸாம் ஹாலில் உங்கள் `நடத்தை` பற்றியது!...`பிட்டு`அடிக்கும் தருணத்தில் உங்கள் ஐம்புலனும்..`விழிப்புணர்வில்`இருப்பது மிக அவசியம்!.முதலில்`பாடி லேங்குவேஜ்`....
கூட்டமான இடங்களில் `குசுப்`போட்டுவிட்டு ,எதுவுமே தெரியாத மாதிரி ஒரு முகபாவத்தின் இருப்பான் பாருங்கள்..அப்படி ஒரு `முக பாவனை`..பிட்டு அடிக்க அத்தியாவசியமாகிறது!.
அடுத்து உங்கள் கண்களை...குவி லென்சாகவும்,குழி லென்சாகவும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் சாதூர்யம்!..இந்தத் திறமையானது,ஒரே நேரத்தில்... தூரத்தில்  இருக்கும் `எக்சாமினரை` கவனிக்கவும்,நுணுக்கி எழுதிய பிட்டைப் படிப்பதற்கும் மிகவும் உதவும்!
அடுத்து மூக்கு...மரிக்கொழுந்து சென்ட் வாசம் என்றால் வெங்கட்ராமன் சார்...பாண்ட்ஸ் பவுடர் என்றால்...சுமதி டீச்சர்,யார்ட்லி சென்ட்...ரோஸி மிஸ்,ஒரு கெட்ட நாத்தம் அடித்தால்..அது எப்பொழுதும் மூக்குப் பொடி போடும்...மைக்கேல்  சாமி சார்!.
இப்படி இந்த நெடிகளின் தீவிரத்திற்கு ஏற்ப,ஆசிரியருக்கும் நமக்கும் இடையே உள்ள தொலைவை யூகிக்கும் ஆற்றலும் அவசியமாகிறது...
அப்புறம் காது மற்றும் வாய்...
நம்மைப் போலவே `பிட்டு`வைத்திருக்கும் சக தோழர்களுக்கு நாம் எழுப்பும் வினோத சங்கேத
ஒலியும்..பதிலுக்கு அவர்கள் எழுப்பும் ஒலியை தெளிவாகப் கேட்கவும்...இவ்விரு அவயங்களும் ஷார்ப்பாக இருப்பது,`பிட்டு` சார்ந்த `தகவல் தொடர்பிற்கு` அவசியமாகிறது.!

இப்படியாக ஒரு தேர்ந்த,`முன் தயாரிப்புகளோடு`,அந்த அரையாண்டுத் தேர்வுக்கு நான் தயாரானேன்!. எக்ஸாம் ஹாலில்,எனக்கு முன்னால் கோவிந்து அமர்ந்தது,எனக்கு மேலும் வசதியாவே போனது...இது தவிர,..பொதுவாக பள்ளியில்.."படிப்பில் சுமார்தான்...ஆனாலும் நல்லவன்"என்ற இமேஜ் இருந்தததால்...ஆசிரியர்களும் என்னை அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கவில்லை!

அந்த அரையாண்டு தேர்வில்,கிட்டத்தட்ட எல்லாப் பாடங்களிலும் 80%மேல் வாங்கி நான்தான் முதல் ரேங்க்!.ஆனாலும் பாருங்கள்...மனோகரன் சார் என் முதுகில் தட்டி என் `ரேங்க் கார்டைத்`தந்த போது..ஏனோ நான் அவ்வளவு மகிழ்ச்சியாக உணரவில்லை!.சொல்லப்போனால் இதற்கு முன் `பார்டர் மார்க்கில்` பாஸ் செய்த போது,இருந்த மகிழ்ச்சி கூட இல்லை!.ரேங்க் கார்டை வாங்கும் போது கூட ,வேறு யாரோ ஒருவரின் கார்டை வாங்குவது போலவே இருந்தது.

இந்த நிகழ்வுகளுக்குப் பின் வகுப்பில் எனக்கு ஒரு தனி `மரியாதை`கிடைத்தது...பல நேரங்களில் `மனோகரன்`சாரின் கேள்விகளுக்கு நான் தவறான பதில் சொன்னபோது கூட, அவர் என்னை அடிக்காதது மேலும் ஆச்சர்யமாகவே இருந்தது!. அது மட்டும் இல்லாமல்,வழக்கமாக என்னோடு சுற்றும் கடைசி பெஞ்சு பசங்க..`இவன் நம்ம இனம் இல்லை போல`ன்னு ஒதுங்கியது,ஒதுக்கியது ...மேலும் ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது!


ஒரு கட்டத்தில் இந்த `அறிவுஜீவி(?!) இமேஜ்`எனக்கு ஒரு கூடுதல் அழுத்தத்தையே தந்தது. இப்படியான அழுத்தத்தில் இருந்த ஒரு நாளில் தான் மறுபடியும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தேன்...ஆமாம்,"இனி எந்தக் காலத்திலும் `பிட்டு`அடிப்பதில்லை!"என்ற முடிவுதான் அது!. அதற்கு முக்கிய காரணங்கள்..பிட்டு அடிப்பதில் உள்ள ரிஸ்க்கும்,சிரமங்களும்!...தவிர பிட்டு அடித்து வாங்கிய அதிக `மார்க்கு`..அப்படி ஒன்றும் அதீத மகிழ்ச்சியைத் தராததும் தான்!..
இப்படியான ஒரு முடிவை நான் எடுத்த அந்த நேரத்தில்,வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரோ..அல்லது சக மாணவர்களோ என்னைக் கவனித்து இருந்தால்,ஏன் தலைக்குப் பின்னே ஒரு `ஒளிவட்டத்தை`ப் பார்த்திருக்கக்  கூடும்!
இப்படி ஒரு `ஞானம்`வந்த பிறகு...ப்ளஸ் டூ வில் `ஜுவாலாஜி எக்சாமில்` ஒரு முறை ...`சைபர்`மார்க் வாங்கியபோது,ஜுவாலாஜி ஆசிரியர்...என்னைக் கிண்டலடித்து,விடைத்தாளை  என் கையில் தந்த போது கூட, போது கூட .கவலையில்லாமல்..அவரோடும்...சக மாணவ,மாணவிகளோடும் சேர்ந்து ..`என்னாலும்`சிரிக்க முடிந்தது!..எப்படியும் அடுத்த எக்சாமில் ...பாஸ் செய்துவிடலாம் என்ற,நம்பிக்கை தந்த `தைரியம்` தான் அது!.

தேர்வில் `காப்பி`அடிப்பது ஒருவகை என்றால்..நம்மில் பலர்...சக மனிதர்களைக் `காப்பி`அடிப்பது இன்னொரு வகை!

அப்பா...`ஷேவிங்`செய்து வைத்துவிட்டுச் சென்ற `ரேசரை`எடுத்து.`அப்பா`போலவே தானும் முயற்சி செய்யும் மீசை முளைக்காத பொடியன்....
திரைப்படத்தில் தன் அபிமான நடிகனைப் பார்த்து,தானும் அது போலவே தலையை சிரைத்துக் கொள்ளும் தீவிர ரசிகன்...
பக்கத்து வீட்டுக்காரர்`கார்` வாங்கி விட்டதால்,வீட்டில் நிறுத்த இடம் இல்லாவிட்டாலும்...தானும் அதேபோலக் கார் வாங்கி...ரோட்டில் நிறுத்தும் நபர்!
நண்பரின் மகன் இஞ்சினியரிங் காலேஜில் படிப்பதால்...மார்க்கு வாங்காத தன் மகனையும்..டொனேஷன் கொடுத்துச் சுயநிதிக் கல்லூரியில் சேர்த்து விடும் தந்தை!...
பக்கத்து வீட்டுக்காரி...வாங்கியதைப் போலவே ,பட்டுப் புடவையும்,வைரத் தோடும் வாங்கித் தரும்படி,கணவனை நச்சரிக்கும் மனைவி!
துட்டும்,இலவசத் திட்டங்களும் கொடுத்து ஓட்டு வாங்கும்...அரசியல்வாதியை `ஃபாலோ`செய்யும் சக அரசியல்வாதி!...
ஒருவர்  `சாதிக் கட்சி` ஆரம்பித்தால்...தொடர்ந்து,அதுபோலவே ஆரம்பிக்கப்படும் மற்ற சாதிக் கட்சிகள்!...
தெலுங்கில் ஒரு படம் `ஹிட்`அடித்து விட்டால்..அதை உடனே தமிழில் `காப்பி`அடிக்கும் இயக்குனர்!...
தன் அபிமான எழுத்தாளனைப் பார்த்து...அவனைப் போலவே தாடியும்,ஜிப்பாவும்,தடித்த மூக்குக்கண்ணாடி சகிதமாக..மோட்டுவளையையும்,சக மனிதர்களையும் வெறித்துப் பார்க்கும் தீவிர வாசகன்!..

யோசிக்க யோசிக்க நம்மில் எல்லோரும்,ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு நபரை காப்பி அடித்துத்தான் வாழ்ந்து வருகிறோம் எனப் புரிந்தாலும்...அப்படியே இந்தக் `காப்பி`விஷயம் தொடர்ந்து,ஒரு கட்டத்தில்..அடுத்தவரின் நகலாகவே சில நேரங்களில் ஆகி விடும்போது..நமக்கான அடையாளத்தை நாம் இழந்து விடுகிறோம் என்பதே உண்மை!.

ஒரு விஷயத்தை நீங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்..அடுத்தவர்களை காப்பி அடித்து சிறப்பாக வாழ்ந்தவர்களை விட சீரழிந்தவர்களே இங்கே அதிகம்!


வளமாக,வசதியாக வாழ்பவர்கள் கூட ,ஒருகட்டத்தில் தாங்கள் எதையோ இழந்ததாகவே உணர்கிறார்கள்...உண்மையில் அவர்கள் அவர்களின் `மகிழ்ச்சியை`த்தான் தொலைத்து இருக்கிறார்கள்!.
ஒருகட்டத்தில் இவர்கள் புதிது புதிதாய் முளைக்கும்..ஆசிரமங்களையும்,சாமியார்களையும் தேடி ஓடுகிறார்கள்!. ஆனாலும் பாருங்கள்...பெரும்பாலும்,இவர்கள் தேடிப் போவது என்னவோ..வேறு ஒரு சாமியாரைப் `காப்பி`அடிக்கும் `டூப்ளிகேட்` சாமியார்களிடம்தான்!

உங்களுக்கு உண்மையாக,உங்கள் இயல்பு படி,இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்வதில் இருக்கிறது உண்மையான மகிழ்ச்சி!. 
இதை உங்களுக்கு எந்த ஆசிரமும்,சாமியாரும் கற்றுத் தரவே முடியாது!
நமக்கான வாழ்க்கையை...நாம் நமக்காக வாழும் போது...அந்த வாழ்க்கை ஒரு அழகானதாக,அர்த்தம் உள்ளதாக,உண்மையான மகிழ்ச்சி கொண்டதாக அமைந்து விடுகிறது...இதுபோல ஒரு வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முட்டாள்தனம்,தவறுகள் கூட...ஒரு மகிழ்ச்சியான,அனுபவ பாடமாகவே அமையும்!


Sunday, May 6, 2012

`புல்லட்ஸ்!`

"நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்!...உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!"

திகைக்க வேண்டாம்!...சரியாகத்தான் சொல்கிறோம்...உங்களுக்குத் தெரியாத,நீங்கள் பார்க்காத,பழகாத மனிதர்களிடம் வெறுப்புக் கொள்வதற்கு ,என்ன காரணம் இருக்கப் போகிறது?!.அதனால்தான் கேட்கிறோம்...உங்களுக்குத் தெரிந்தவர்கள்,யாராவது இருந்தால் சொல்லுங்கள்!

ஆம்...நீங்கள் நினைப்பது சரிதான்!...காசுக்காக உயிர் பறிக்கும் கூலிப்படையினர் தான் நாங்கள்!.துட்டு இல்லாமல் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவே முடியாது!.ஆனாலும் உறுதியாய்ச் சொல்கிறோம் உங்களில் யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள்!.நீங்கள் விரல் நீட்டும் நபரை,எந்த உறுத்தலும் இல்லாமல் கொல்லக்கூடியவர்கள்..சுருக்கமாகச் சொன்னால்...கொலையையும் கலையாகச் செய்பவர்கள்!

சரி..உங்களுக்குத் தெரிந்தவர்கள்,நீங்கள் கேள்விப்பட்டவர்கள் இவர்களில் யாராவது இருந்தால் சொல்லுங்கள்....
"ஆசிரியன் என்ற பெயரில் பள்ளிச் சிறுமிகளைப் பாழ் படுத்தியன்!"...
"சாதி,மதம் என்று,மக்களைப் பிளவுபடுத்தி...நாட்டைச் சீரழிக்கும் அரசியல்வாதி!"
"காசுக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ராணுவவீரன்!"
"அரசு மருத்துவ மனையில் கையெழுத்துப் போட்டுவிட்டு,அவன் சொந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கும் மருத்துவன்"
"கமிஷனுக்கு ஆசைப்பட்டு,கலவையில் கைவைக்கும் காண்டிராக்ட் காரன்"
"ஆற்று மணலை கடத்தும் அயோக்கியன்"
"வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளைஞர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்,வேலை ஏய்ப்பு நிறுவனங்கள் நடத்துபவன்"
"குடும்பப் பெண்களை விபசாரத்தில் தள்ளும் மாமாப் பையன்!"
இப்படி....இப்படி....இன்னும் அனேக சமூக விரோதிகள்!...இப்பொழுது சொல்லுங்கள் இவர்களை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்,கேள்விப் பட்டும் இருக்கிறீர்கள்தானே?

ஆனாலும் பாருங்கள்...இதுபோல நபர்களைக் கொல்ல,எந்த `நல்லவர்களும் எங்களுக்கு வாய்ப்பே தருவதில்லை!
இதில் இன்னும் ஒரு விபரீதம் என்னவென்றால்...இதுபோல நபர்கள்,எங்களை விலைக்கு வாங்கி வைத்திருப்பதுதான்!
ஆக...துரதிஷ்ட வசமாக நாங்கள் கொல்ல நேர்வது எல்லாம்...
"மணல் கடத்தலைத் தடுக்கும் இளைஞன்"
"சரண் என்று,கையைத் தூக்கிவரும் அகதி!"
"போதை மருந்து கடத்தலைத் தடுத்த காவலர்"
இப்படி...இப்படி...அப்பாவிகள் லிஸ்டாகவே இருக்கிறது!

எந்த ஒரு மன உறுத்தலும் இல்லாமல்,எப்படி உங்களால் கொல்ல முடிகிறது என நீங்கள் கேட்கலாம்...அதான் முன்னமே சொல்லிவிட்டோமே..."விலைக்கு வாங்கியவர்களுக்கு விசுவாசமானவர்கள் நாங்கள்"...டாட்!
என்றாலும் சில நேர்மையான நபர்கள்,அபூர்வமான சில தருணங்களில் எங்களைப் பயன்படுத்தியது உண்டு...
இவர்கள் சுட்டிக் காட்டும் நபர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்...உண்மையில் அவர்கள் இந்தச் சமூகத்தில் வாழவே அருகதையற்றவர்கள்...அவர்களைப் போட்டுத் தள்ளும் போது மட்டும்,எங்களிடம் ஒரு உற்சாக வேகம் பீறிட்டுக் கிளம்பும்!.

உங்களுக்குத் தெரியுமா?...எவ்வளவு கொடூரமானவனும்,மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்தக் கடைசி நொடிகளில்,அதாவது எங்களை நேராக சந்திக்கும் தருணத்தில்...அவர்கள் கண்களில்,அவர்கள் அதுவரை செய்த பாவங்களை மன்னித்து,உயிர்ப் பிச்சை தரும்படி...ஒரு கெஞ்சுதல் தெரியும்!...அந்த நொடி... அந்த நொடி...நாங்கள் தயங்கித் தடுமாறித்தான் போவோம்!...நாங்கள் தயங்கித் தாமதிக்கும்,அந்த `மைக்ரோ`செகண்டில்...அவர்கள் கண்களில் மறுபடியும்,ஒரு நம்பிக்கையும்...அதே பழைய குரூரமும் திரும்பும் பாருங்கள்!!!...பெரும்பாலும் இந்த நேரத்தை நாங்கள் `மிஸ்`செய்வதில்லை...வெடித்துக் கிளம்பி,நேராக அவர்கள் நெற்றிப் பொட்டோ,இதயமோ...அசுர வேகத்தில் பாய்ந்து குத்திக் கிழித்து விடுவோம்!...இளம் சூடான அவர்கள் குருதி...எங்களை நனைக்கும் அந்தத் தருணம் இருக்கிறது பாருங்கள்...ஆஹா!...உண்மையில் அப்பொழுதுதான் எங்களின் ,பிறவிப் பயனை முழுதாய் உணர்கிறோம்!

ஐயோ!...இவ்வளவு கொடூரமானவர்களா நீங்கள்?...இதயத்தில் கருணையே  இல்லாத `ஜடமா` நீங்கள்? என நீங்கள் சந்தேகிப்பது புரிகிறது...

உண்மைதான் மனிதர்களே!...நீங்கள் யூகித்தது சரிதான்...நாங்கள் `ஜடம்`தான்....எங்களை `தோட்டாக்கள்`என அழைப்பார்கள்!....`புல்லட்ஸ்`என்று ஆங்கிலத்தில் சொன்னால்...தமிழர்களாகிய நீங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்!.
எங்கள் இருப்பிடம் துப்பாக்கிகள்தான்...எங்களைப் பயன் படுத்துவதும் நீங்கள்தான்!

என்ன?!!!...ஜடப் பொருள்கள் எல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டனவா?என நீங்கள் வியப்பது புரிகிறது...
"சிந்திக்க வேண்டிய மனிதர்களான நீங்கள் `ஜடமாகிப்`போனதால்...ஜடமான நாங்கள் சிந்திக்க வேண்டியது ஆகிவிட்டது மனிதர்களே!"
ஆறறிவு படைத்த மனிதனை.. போயும் போயும்... ஜடப் பொருள்கள் கேலி பேசுவதா..என ,உங்களில் பலர் கூச்சலிடுவது கேட்கிறது...உண்மையில் எங்களை `ஜடம்`என கேலி பேச,உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை மனிதர்களே!..அதிலும் குறிப்பாக `தமிழர்களான`உங்களுக்கு சுத்தமாய் அந்த யோக்யதை இல்லை..!

யாழ் நூலகம் தெரியுமா?...யாழ் நூலகம்!...இலங்கையில் அது எரிக்கப் பட்டபோது இங்கே இந்தியாவில் நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழர்களே?`ஜடமாக`நின்று வேடிக்கைதானே பார்த்தீர்கள்?!...நூலகக் கட்டிடங்களும்..நூல்களும்...கேவலம் `ஜடப்`பொருள்கள் என்றுதானே அத்தனை அலட்சியம் உங்களுக்கு?...அட முட்டாள்களே!...அவர்கள் எரித்தது...உங்கள் மொழியை...உங்கள் இனத்தை...உங்கள் வரலாற்று ஆதாரங்களை!.
அட ...ஆடுமாடு கூட ,தன இனத்திற்கு ஒரு ஆபத்து என்றால்..ஒற்றுமையாகக் குரல் கொடுக்கிறதே!..குறைந்த பட்சம் ..அந்த உணர்வாவது உங்களுக்கு இருக்க வேண்டாமா?
"ஆயிரம் மக்கள் அழிக்கப்படுவதை விட..ஒரு நூலகம் அழிக்கப்படுவது அதிக ஆபத்தானது"
என்று கூடவா உங்கள் `பகுத்தறிவு `உங்களுக்குச் சொல்லவில்லை?!

என்ன தலை கவிழ்ந்து நின்று விட்டீர்கள்?
யோசித்துப் பாருங்கள் மனிதர்களே!...நாங்கள் ஜடமாகப் பிறந்து,ஜடமாகவே மடிந்தும் விடுகிறோம்...ஆனால் உயிருள்ள,பகுத்தறிவுள்ள மனிதனாகப் பிறந்த நீங்கள்...ஜடமாக அல்லவா...உங்கள் நிலையில் இருந்து,கீழே இறங்கி விட்டீர்கள்?..
இப்பொழுதாவது புரிகிறதா எங்களின் ஆதங்கம்?.
எங்களுக்கும் சரியான நபர்களின் கரங்களில் இருந்து,தவறான நபர்களை தண்டிக்கவே ஆசை மனிதர்களே!...எந்த நிலையிலும் தவறு எங்களுடையது அல்ல...நாங்கள் வெறும் கருவிகளே!...அதனால்தான் மீண்டும் உங்களைக் கேட்கிறோம்..
நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்...உங்களுக்குத் `தெரிந்தவர்கள்` யாராவது இருந்தால் சொல்லுங்கள்!

Friday, February 3, 2012

`பம்பரக்` கண்ணாலே!

`பம்பரத்தைப்`படைத்தவன் நிச்சயம் ஒரு `ஞானி`யாகத்தான் இருக்க வேண்டும்!.எவ்வளவு யோசித்தாலும்,அதை விட ஒரு அழகான விளையாட்டுப் பொருளை,என்னால் கற்பனை செய்ய இயலவில்லை!.இப்பொழுதெல்லாம் ...இது போல விளையாட்டுகளை எல்லாம் விட்டு விட்டு,அப்பார்ட்மென்ட் வீடுகளில்,தனித்தனியாக `வீடியோ கேம்`விளையாடிக் கொண்டிருக்கும்,சோடாபுட்டிக் கண்ணாடி சிறுவர்களைப் பார்க்கையில் வருத்தமே மிஞ்சுகிறது.


என் பத்து வயதில்தான் பம்பரம் எனக்குப் பரிச்சயமானது.முழுப் பரீட்சை லீவு ஆரம்பிக்கும் ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே,பம்பர சீசனும்`ஆரம்பித்து ,ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் பாக்கெட் மணி எல்லாம்,சேமிப்பாகி `பம்பரமாக`உருமாறி விடும்!.பம்பரத்தை புதிதாக எளிதில் கடைகளில் வாங்கி விடலாம்,ஆனால் அதை நமக்கு ஏற்றவாறு `கண்டிஷனில்`கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல.


முதலில் நமக்குப் பிடித்த வடிவத்தில்,அளவில் அது கிடைக்க வேண்டும்.அதில் பெயருக்கு `ஆணி`என்று ஒரு கம்பியை செருகி இருப்பார்கள்.அதை அப்படியே சுற்றிவிட்டால்...`தைய்யா தக்கா` என்று அங்கும் இங்கும் குதிக்குமே தவிர,ஒரே இடத்தில் நின்று `பூ` போல சுற்றாது.தவிர சுழலும் போது,கையில் எடுத்தாலும்...கம்பி கையைப் பதம் பார்த்துவிடும்!.ஆக...பம்பரம் வாங்கியதும் முதல் வேலை ஆணி போடுவதுதான்.சுவற்றில் அடிக்கும் மொளுக்கட்டை ஆணியை அடித்தால்...பம்பரம் வாயைப் பிளந்து விடும்!ஆகவே திருகும் வசதி உள்ள ,`ஸ்க்ரூ ஆணிதான்(!)` இதற்குத் தோதானது!


அடுத்து ஒருவழியாக...ஆணியை ஸ்க்ரூ செய்தபின்...லேத் வைத்திருக்கும் `மாரி` அண்ணனிடம் கொடுத்து,ஆணியின் தலைப் பகுதியை வெட்டி வாங்கி...பின் வெட்டுப்பட்ட இடத்தைத்  தரையில் தேய்த்து ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவோம்.


இப்ப பம்பரம் ரெடி...அடுத்து... `சர்டிபிகேட்`!.இது எங்களைவிட சீனியரான பத்தாம் வகுப்புப் படிக்கும் மணி அண்ணன்தான் தருவார்!ஆகவே பம்பரம் ரெடியானதும் நாங்கள் நேராகச் செல்வது...மணி அண்ணன் வீட்டுக்குத்தான்.அவர் பம்பரத்தை வாங்கி கொஞ்ச நேரம் அதன் வடிவத்தை ஆராய்ச்சி(?!) செய்வார்,பின் சாட்டையால் சொடுக்கி சுழலவிட்டு கொஞ்சம் ஆராய்ச்சி(?!),...அடுத்து,அது சழன்று கொண்டிருக்கும் போதே,ஆள்காட்டி விரலுக்கும்,நடு விரலுக்கும் நடுவே பம்பரத்தை ஏற்றி,லாவகமாக உள்ளங்கைக்கு கொண்டு வந்து விடுவார்!இப்பொழுது பம்பரம் அவர் உள்ளங்கையில் அழகாக சுழன்று கொண்டிருக்கும்... மறுபடியும் கண்ணின் அருகே வைத்து `ஆராய்ச்சி`(?!)தொடரும்...ஒரு வழியாக பம்பரம் சுற்றி நிற்கும் முன்..."ம்ம்ம்...நல்லா `பொங்கு`ன்னு இருக்குடா!"என திருவாய் அருள்வார்...!இதுதான்...இதேதான்!... இந்தப் "பொங்கு ன்னு இருக்குடான்னு"சொல்வதுதான் எங்களுக்கு ஐ.எஸ்.ஓ சர்டிபிகேட்!....அவர் எதிர்பார்க்கும் தரத்தில் பம்பரம் இல்லை என்றால்...அவரின் ஆலோசனைப் படி `பக்குவப்`படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப் படும்!...நாலைந்து முறை அலைந்தும்,மணி அண்ணனின் சர்டிபிகேட் கிடைக்காமல் அலைந்தவர்கள் எல்லாம் நிறைய இருக்கிறார்கள்!


சரி..பம்பரம் ஒருவழியா செட் ஆகிடுச்சு!...இனி அடுத்து `டோர்னமென்ட்`தான்...கிரிக்கெட்டில் `ரன்`எடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்,பம்பர விளையாட்டில் `அபீட்`எடுப்பது!...சுழன்று கொண்டிருக்கும் பம்பரத்தை ,சாட்டையால் லாவகமாகச் சொடுக்கி,மேல எழும்பும் பம்பரத்தை,கீழே நழுவ விடாமல்,`கேட்ச்`செய்வதுதான் ...`அபீட்!`


குழுவாக விளையாடுகையில் `அபீட்`எடுக்கத் தாமதம் செய்பவனின் பம்பரத்தை,வட்டத்தின் நடுவில் வைக்க வேண்டும்!.அப்புறம் என்ன...எல்லோரின் பம்பரத்தின் ஆணியும்,வட்டத்தில் இருக்கும் பம்பரத்தைக் குத்திக் குதறி...சொறி பிடித்தால் போல செய்துவிடும்...!சமயத்தில் பிளந்தும் விடும்...ஆனால் நாங்கள் இதற்காக சளைத்தது இல்லை...புதுப் புது பம்பரங்கள்...புதுப் புது முயற்சிகள்!


இப்படியான ஒருநாளில்,விளையாட்டு முடிந்து...பம்பரத்தையும்,சாட்டையையும் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவாறே சட்டென ,கோயிந்து என்ற கோவிந்த ராஜுவிடம் கேட்டேன்...
"எண்டா...இந்தப் பூமி எப்பவும் சுத்திகிட்டே இருக்கே...இதை எவ்வளவு பெரிய `சாட்டை`வைத்து யாருடா சுத்தி விட்டு இருப்பாங்க?"


அவித்த மரவள்ளிக் கிழங்கை மென்று கொண்டிருந்த கோயிந்து...என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்க்க ...நான் கிழங்கு மென்று கொண்டிருந்த,அவன் வாயையே பார்த்துக் கொண்டிருக்க, அண்ணாந்து ஆகாயம் பார்த்த கோயிந்து கிழங்கை சாவதானமாக விழுங்கி விட்டுச் சொன்னான்....
"வேற யாரு?...பெருமாள் சாமிதேன்!"


சமகாலத்தில் இருந்து கொண்டு இந்தப் பால்ய நினைவுகளை `ரீவைண்ட்`செய்து பார்க்கிறேன்...நான் படித்த பெளதிக (Physics)கல்விக்கும்...இன்றளவில்...கோள்கள்,வானவெளி பற்றிய தகவல்கள் அறியும் என் ஆர்வத்திற்கும் அந்தப் `பம்பர`விளையாட்டுதான் விதையாகி இருந்திருக்கக் கூடும்!..கோயிந்திடம் கேட்ட கேள்வியை,மறுபடியும் இன்னும் சரியான நபர்களிடம் கேட்டிருந்தால் ..ஒருவேளை இன்னும் நான் சரியான பாதையில் பயணித்திருக்கலாம்!


இதைப் படிக்கும் நண்பர்களுக்குக் குழந்தைகள் இருப்பின்...அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம் இதுதான் ..உங்கள் குழந்தைகளை சக குழந்தைகளோடு விளையாட விடுங்கள்!..அவர்கள் அதிகம் கேள்வி கேட்க அனுமதியுங்கள்!....மறுபடியும் சொல்கிறேன்,யாரையும் கேள்வி கேட்காமல்...யாரையும் தொல்லை செய்யாமல் தனிமையில்`வீடியோ கேம்`விளையாடும் குழந்தைகள்... நிச்சயம் `சமர்த்துக்` குழந்தைகள் அல்ல!..இன்று குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் `தனிமையை` நாளை உங்களுக்கும் அதே குழந்தைகள் தரக்கூடும்!


எல்லாம் சரி...கோயிந்து என்ன செய்கிறான் என்கிறீர்களா?...அன்பான மனைவி,குழந்தைகள்,அரசு வேலை என வாழ்கிறான்!.அதுமட்டுமல்ல அவனுக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை எல்லாம் `பெருமாளின்`அருள் என்றே இன்றளவும் நம்புகிறான்!.குடும்ப வாழ்க்கையில் திருப்தி என்றாலும்..இன்னும் ஆன்மீக வாழ்வில் எதையோ தேடுகிறான்...வருடத்தில் ஒருமுறையாவது `காசி``ராமேஸ்வரம்``பத்ரி நாத்``கேதார்நாத்`என ஏதாவது ஒரு யாத்திரை  சென்று விடுகிறான்!.அவன் தேடுதல் நிச்சயம் `பெருமாளை`ஊனக் கண்ணால் காண்பதாக இருக்கலாம்!..அவன் பார்த்தால் நிச்சயம் எனக்குச் சொல்வான்!...நானும் உங்களுக்குச்சொல்கிறேன்! 

Saturday, December 17, 2011

`ஜூனி&சீனி`

ஜூனி&சீனி`...ஒரு அறிமுகம்:- ஜூனியரும்,சீனியரும் நம் `நாக்கு அவுட்!`பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர்கள்!.சுருக்கமாக ஜூனி...சீனி!.காற்றுப் புக முடியாத இடத்திலும் நுழைந்து விடும்,அசகாய சூரர்கள்! எளிதில் பேட்டி தராத அரசியல் தலைவர்களைக் கூட,சமார்த்தியமாக..வாயைக் கிண்டி பேசவைத்து விடுவார்கள்!.இதோ,நம் `நாக்கு அவுட்`பத்திரிக்கையின் வாசகர்களுக்காக(?! )எதற்குமே அசைந்து கொடுக்காத,நம் பிரதமரின் பிரத்தியேக பேட்டி!.இது முழுக்க,முழுக்க ஒரு கற்பனை பேட்டிதான் என்றாலும்,வருங்காலத்தில் இது நிஜமானால்,அதற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல!.மேலும் இது முழுக்க முழுக்க,ஒரு சீரியஸ் பேட்டி என்பதால்,உங்கள் முகத்தையும்...கொஞ்சம் `சீரியசாகவே`வைத்துக் கொள்ளவும்!...ரெடி!...ஸ்டார்ட் மியூசிக்...!!! 


சீனியாரிட்டி அடிப்படையில் சீனியரே பேட்டியை ஆரம்பிக்கிறார்.... 
சீனி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தது ஏன்?பிரதமர்: அது....இந்தியாவை விரைவில் வல்லரசாக்கும்,எங்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம்!.ஆனால் துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதியால்,நாங்கள் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்க வேண்டியதாக ஆகி விட்டது!.
சீனி:.அதெப்படி சில்லறை வர்த்தகத்தின் மூலம்,வல்லரசு ஆக முடியும்?அதுவும் விரைவில்?.
பிரதமர்: வெரி சிம்பிள்...இந்தத் திட்டப்படி,ஏற்கனவே வல்லரசாக இருக்கும்...நாடுகளுக்கு மட்டுமே நாங்கள் அனுமதி தருவோம்!,கொஞ்ச நாள் வியாபாரத்தில் அவர்கள்,எப்படியும் நம்மை அடிமைப் படுத்தி விடுவார்கள்...நாம் ஒரு வல்லரசு நாட்டின்`கண்ட்ரோலில்` இருக்கும் பொழுது,நாமும் ஒரு வல்லரசுதானே?முடிவுகளை யார் எடுத்தால் என்ன?...இப்பொழுது நான் எடுக்கும் எல்லா முடிவுகளும்,என்னுடையதா என்ன?(பிரதமரின் இந்த அதிரடி எதிர்க் கேள்வியால் சீனியின் பல்ஸ் எகிறுகிறது...அவரை ஆசுவாசப் படுத்தி விட்டு ஜூனி,கேள்விகளைத் தொடர்கிறார்...)
 ஜூனி: அண்ணா ஹசாரே?...
பிரதமர்: ஹேஹே...அவரைத்தான் இப்பொழுது எங்களைப்போல,`காமெடி பீசு` ஆக்கிவிட்டோமே!.
ஜூனி : சரி...சார்...தமிழகப் பிரச்சினைகள் பற்றி...முல்லைப் பெரியாறு பிரச்சினையை,நீங்கள் மனது வைத்தால் தீர்த்து விடலாமே?கேரளாவில்...உங்கள் கட்சியின் ஆட்சிதானே நடக்கிறது?.
பிரதமர்: எது?...கேரளாவில் எங்கள் கட்சியின் ஆட்சியா நடக்கிறது?வழக்கமாக அங்கே,கம்யுனிஸ்டுகள் ஆட்சி தானே நடக்கும்?அப்போ...உம்மன் சாண்டி காங்கிரஸ் ஆளா?(பிரதமர் உதவியாளரைப் பார்க்கிறார்...அவர் கூகுளில் தேடி,அரை மனதோடு `ஆமாம்`என்பது போல தலை ஆட்டுகிறார்!)...நீங்களே பாருங்கள்...இந்தத் தகவல் எல்லாம்,நானாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!என் கவனத்திற்கு நீங்கள் கொண்டுவந்ததற்கு நன்றி!...
விரைவில்...அணையை உடைத்து விடலாம்!...குறுக்கே அணை இருப்பதால்தானே,தமிழகதிற்கு வர வேண்டிய தண்ணீரை அவர்கள் தடுக்கிறார்கள்!?...
(இப்பொழுது ஜூனி டென்சன் ஆகிறார்...சீனி ஆல்ரெடி அரை மயக்கத்தில் இருப்பதால்,ஜூனியே சுதாரித்து தொடர்கிறார்!).
ஜூனி: தமிழக முதல்வர் தங்களுக்கு,தமிழகப் பிரச்சினைகள் குறித்தும்,மத்திய அரசு உதவி கேட்டும் பல கடிதங்கள் தங்களுக்கு எழுதியும்,தாங்கள் ஏன் இதுவரை ஒரு பதில் கூட எழுதவில்லை?...
பிரதமர்: அந்தக் கடிதங்கள் எல்லாம்,முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதப் பட்ட,தமிழ் கடிதங்களாக இருப்பதால்,எங்கள் அலுவலகத்தில்...அதை,இந்தியில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்...கூடிய விரைவில்,ஏதாவது ஒரு இந்திய மொழியில்,பதில் எழுதி விடுவோம்!.
ஜூனி: அலைக்கற்றை ஊழலில்,இப்பொழுது உள்துறை அமைச்சர்,சிதம்பரம் பெயரும் அடிபடுகிறதே?!
.பிரதமர்: சிதம்பரத்தின் நேர்மையை நான் முழுக்க,முழுக்க நம்புகிறேன்!மேலும்...பிரணாப் முகர்ஜி,கபில் சிபல் எல்லோரும் அவ்வாறே நம்புகிறார்கள்...நான்தான் சிதம்பரம் நல்லவர் என்று சர்டிபிகேட் தருகிறேனே!.
ஜூனி: இப்படித்தான்...உங்கள் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும், `சர்டிபிகேட்` தந்தீர்கள்?!!!.
பிரதமர்: ராசா விஷயம் வேறு...ஆனால் சிதம்பரத்திற்கு ஞாபக மறதி என்பது...நாட்டிற்கே தெரியுமே!.,அவர் எதோ ஒரு ஞாபக மறதியில் எடுத்த,ஒரு முடிவை...நாம் பெரிது படுத்தக் கூடாது!
ஜூனி: தமிழக காங்கிரஸ் பற்றி?...
பிரதமர்: தம்பி...தமிழக காங்கிரஸ் பற்றி...சீரியசாக சொல்வதற்கு ஒன்றுமில்லை!காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் இருக்கின்றன,அதில் முழுக்க முழுக்க மக்களை மகிழ்விக்க நாங்கள் அமைத்த ஒரு கலைக் குழுதான் தமிழகக் காங்கிரஸ்...பல்வேறு பிரச்சினைகளில் இருக்கும் மக்கள்...சிரித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே அமைக்கப் பட்டது அது!.எந்நேரமும் இருக்கும் சீரியசான அரசியலில்,எங்களுக்கும் ரிலாக்ஸ் தருவது இவர்கள்தான்!.இந்த விஷயத்தில் தமிழக மக்கள்...நீங்கள்தான் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!.இப்பொழுது நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஞான தேசிகன் அவர்களும்,தங்க பாலுவிற்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல...அவரும் அவர் பங்களிப்பாக,காமெடி அறிவிப்புகள் மூலம் உங்களை எல்லாம் மகிவிப்பார் என,நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்!
சீனி: அதெல்லாம் சரி சார்...கோஷ்டி சண்டை இல்லாத சத்திய மூர்த்தி பவனை தமிழக மக்கள் எப்பொழுது பார்ப்பது?
(இந்தக் கேள்விக்கு,பிரதமர் ஜூனி&சீனி இருவரையும் குறுகுறுவெனப் பார்க்கிறார்...பின் அவர் உதவியாளரைப் பார்க்கிறார்...அவரோ முகத்தைத் திருப்பிக் கொள்ள,மறுபடியும் வேறு வழி இல்லாமல் ஜூனி&சீனி பக்கம் பார்வையைத் திருப்பி,அவர்களையே வெறித்துப் பார்க்கிறார்...ஏறக் குறைய நாயகன் படத்தில்,நிழல்கள் ரவி இறந்ததும் கமல் கதறி அழுவாரே,அது போல ஒரு முக பாவனைக்கு வருகிறார்!...என்றாலும் கொஞ்ச நேரத்தில் சுதாரித்து,நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தி,கண்களை மூடிக் கொள்கிறார்...ஏறக்குறைய ஒரு ஆழ்நிலை...தியான நிலைக்கு சென்றுவிட்ட அவரை,அதற்கு மேலும் கேள்விகள் கேட்டு தொல்லைப் படுத்தாமல்,ஓசையின்றி வெளியேறுகிறது ஜூனி&சீனி டீம்!)......


நண்பர்களே!... அரசியலில் சம காலத்தில்,எல்லா முக்கிய விஷயங்களிலும்,நம் பிரதமர் வாயே திறக்காமல்,எந்த ஒரு திடமான முடிவும் எடுக்காமல் இருக்கிறார் என்ற உங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு...அதன் விளைவே இந்தக் கற்பனை கேள்வி பதில்கள்..!