Saturday, May 12, 2012

`பிட்டு!`

கம்ப்யூட்டர் `ஹார்ட் டிஸ்க்கில்` இருக்கும் சில பதிவுகள் போல,எளிதில் அழிக்க முடியாத பதிவுகளாக நமது மூளையில் சில நினைவுகள் தங்கி விடுவது உண்டு!. முக்கியமாக நமது பள்ளிப் பருவம்!...அதிலும் குறிப்பாக தேர்வில் `பிட்டு` என்ற `காப்பி` அடிக்கும் அனுபவம்!

அனுபவங்கள்தான் நமக்கு படிப்பினையைத் தருகின்றன!. பிட்டும் அப்படியான ஒரு படிப்பினையைத் தரும் அனுபவம்தான்!
நீங்கள் பிட்டு அடித்த அனுபவம் இல்லாத மாணவனாக இருந்தால்,உறுதியாகச் சொல்கிறேன் ,நீங்கள் ஒரு அழகான அனுபவத்தை இழந்து விட்டீர்கள்!
ஒன்பதாம் வகுப்பு வரும்வரை,நானும் அப்படியான ஒரு அனுபவத்தை இழந்துதான் போனேன்!. ஒன்பதாம் வகுப்பில்தான்,என பூர்வ புண்ணிய `கர்மா`படி ,மனோகரன் சார், எனக்கு வகுப்பு ஆசிரியராக வாய்த்தார்!. மனோகரன் சாரும்,அவர் பிரம்பும் பள்ளியில் அவ்வளவு பிரபலம்!. காரமடை பிரம்பு சகிதமாக,விடைத் தாள்களோடு அவர் வகுப்பில் நுழைந்தாலே,எல்லா மாணவர்களுக்கும்..`பில்டிங்`ஸ்ட்ராங்காக இருந்தாலும்,`பேஸ்மென்ட்`ஆடிக் கொண்டுதான் இருக்கும்!.தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு ஏற்ப அவரின் பிரம்படி அமையும்!. அடிவாங்குவது கூட ,நாங்கள் அவ்வளவு அவமானகரமான ஒரு விஷயமாகக் கருதியது கிடையாது என்றாலும்,எங்கள் வகுப்பு மாணவிகள் முன்னிலையில் அடிவாங்குவதுதான் ஆகப் பெரிய அவமானமாக எங்களைக் கருத  வைத்தது!.

இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் எப்படியோ`பார்டர்`மார்க்கில் பாஸாகி,காலாண்டுத் தேர்வுவரையில்...,மனோகரன் சாரின் பிரம்படியில் இருந்து தப்பித்து வந்தேன்...ஆனால்,அரையாண்டுத் தேர்வு அறிவிப்பு வந்த போது,என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனது!. இதுபோல ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான்,ஒரு சுபயோக சுபதினத்தில்... இனி,`பிட்டே துணை` என்ற `தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தேன்!

தீர்மானம் என்னவோ தீர்க்கமாக எடுத்து விட்டாலும்,அதை வெற்றிகரமாக செயல் படுத்துவது எப்படி என்று,பயமும்..குழப்பமும் ஒருங்கே வந்தது!
அதுவரை `பிட்`அடித்து,`பாஸ்`செய்வதை மட்டுமே `பாசிட்டிவாக`யோசித்த மூளை...,"`பிட்` அடித்து மாட்டிக் கொண்டால்?"..என்று `நெகடிவாக யோசிக்க ஆரம்பித்தது!. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை ...
எங்கள் பள்ளியில்,`பிட்`அடித்து மாட்டிக்கொண்டால் கிடைக்கும் `தர்ம அடி`..தேர்வில் பெயிலானால் கிடைக்கும் பிரம்படியை விட மோசமானது!...பெயிலானால் நம்ம அவமானம்,நம்ம வகுப்போடு முடிந்து போகும்...பிட்டு அடித்து மாட்டிக் கொண்டாலோ,டோட்டலா `ஸ்கூல்` முழுக்க
நம்ம `இமேஜ்`..டேமேஜ் ஆகிடும்!

இருந்தாலும் `ரிஸ்க்`எடுப்பது என்று நான் `தீர்க்கமான`முடிவில் இருந்தபடியால்...அடுத்த கட்ட நடவடிக்கையாக...நான் ஆலோசனைக்காக சென்றது...ஆறாம் வகுப்பில் இருந்தே `பிட்டு`அடித்தே பாஸ் செய்து வந்த அனுபவஸ்தன்...`கோவிந்து`வீட்டுக்குத்தான்!
நான் சென்ற போது,ஆங்கிலத் தேர்விற்கான `பிட்டு`தயாரிப்பில் மும்முரமாக இருந்தான் கோவிந்து!. நான் தயங்கிய படியே,ஒருவாறு விஷயத்தை சொல்லவும்...அவன் ஒரு `மந்தகாசப் புன்னகையோடு...சில,பல `டிப்ஸ்`களை தந்தான்!
அவன் சொல்லச் சொல்ல...உண்மையில் `பிட்டு`அடிப்பது ஒன்றும் அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல என்று தெளிவாகப் புரிந்தது!. இதெல்லாம் நமக்கு சரியா வருமா என,கொஞ்சம் குழம்பி யோசித்த எனக்கு, உடனே தைரியம் சொல்லி ..எக்ஸாம் ஹாலிலும் உதவி செய்வதாக வாக்களித்தான்!

உண்மையில் நீங்கள் நினைப்பதுபோல `பிட்டு`அடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான  விஷயம் அல்ல!.நாலு பக்கக் கட்டுரையை நாலு சென்டிமீட்டர் நீள,அகலம் கொண்ட தாளில் ,நுணுக்கி எழுதுவது சாதாரணமா?!!!. இப்படி எழுதப்பட்ட ,30-40`பிட்டு`களை...உடையில் ஆங்காங்கே பதுக்கி வைத்து,எந்தெந்த கேள்விக்கான விடைகள்,எந்தெந்த `பிட்டில்`..எந்தெந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்றும்..தெளிவாக இருக்க வேண்டும்!. உண்மையில் அபார `ஞாபக`* சக்தி இருந்தால் ஒழிய இது சாத்தியம் இல்லை!.(*இவ்வளவு அபார ஞாபக சக்தியுள்ளவர்களுக்கு `விடைகள்`மறந்து போவது...ஒரு ஆச்சர்ய முரண்!)

அடுத்து எக்ஸாம் ஹாலில் உங்கள் `நடத்தை` பற்றியது!...`பிட்டு`அடிக்கும் தருணத்தில் உங்கள் ஐம்புலனும்..`விழிப்புணர்வில்`இருப்பது மிக அவசியம்!.முதலில்`பாடி லேங்குவேஜ்`....
கூட்டமான இடங்களில் `குசுப்`போட்டுவிட்டு ,எதுவுமே தெரியாத மாதிரி ஒரு முகபாவத்தின் இருப்பான் பாருங்கள்..அப்படி ஒரு `முக பாவனை`..பிட்டு அடிக்க அத்தியாவசியமாகிறது!.
அடுத்து உங்கள் கண்களை...குவி லென்சாகவும்,குழி லென்சாகவும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் சாதூர்யம்!..இந்தத் திறமையானது,ஒரே நேரத்தில்... தூரத்தில்  இருக்கும் `எக்சாமினரை` கவனிக்கவும்,நுணுக்கி எழுதிய பிட்டைப் படிப்பதற்கும் மிகவும் உதவும்!
அடுத்து மூக்கு...மரிக்கொழுந்து சென்ட் வாசம் என்றால் வெங்கட்ராமன் சார்...பாண்ட்ஸ் பவுடர் என்றால்...சுமதி டீச்சர்,யார்ட்லி சென்ட்...ரோஸி மிஸ்,ஒரு கெட்ட நாத்தம் அடித்தால்..அது எப்பொழுதும் மூக்குப் பொடி போடும்...மைக்கேல்  சாமி சார்!.
இப்படி இந்த நெடிகளின் தீவிரத்திற்கு ஏற்ப,ஆசிரியருக்கும் நமக்கும் இடையே உள்ள தொலைவை யூகிக்கும் ஆற்றலும் அவசியமாகிறது...
அப்புறம் காது மற்றும் வாய்...
நம்மைப் போலவே `பிட்டு`வைத்திருக்கும் சக தோழர்களுக்கு நாம் எழுப்பும் வினோத சங்கேத
ஒலியும்..பதிலுக்கு அவர்கள் எழுப்பும் ஒலியை தெளிவாகப் கேட்கவும்...இவ்விரு அவயங்களும் ஷார்ப்பாக இருப்பது,`பிட்டு` சார்ந்த `தகவல் தொடர்பிற்கு` அவசியமாகிறது.!

இப்படியாக ஒரு தேர்ந்த,`முன் தயாரிப்புகளோடு`,அந்த அரையாண்டுத் தேர்வுக்கு நான் தயாரானேன்!. எக்ஸாம் ஹாலில்,எனக்கு முன்னால் கோவிந்து அமர்ந்தது,எனக்கு மேலும் வசதியாவே போனது...இது தவிர,..பொதுவாக பள்ளியில்.."படிப்பில் சுமார்தான்...ஆனாலும் நல்லவன்"என்ற இமேஜ் இருந்தததால்...ஆசிரியர்களும் என்னை அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கவில்லை!

அந்த அரையாண்டு தேர்வில்,கிட்டத்தட்ட எல்லாப் பாடங்களிலும் 80%மேல் வாங்கி நான்தான் முதல் ரேங்க்!.ஆனாலும் பாருங்கள்...மனோகரன் சார் என் முதுகில் தட்டி என் `ரேங்க் கார்டைத்`தந்த போது..ஏனோ நான் அவ்வளவு மகிழ்ச்சியாக உணரவில்லை!.சொல்லப்போனால் இதற்கு முன் `பார்டர் மார்க்கில்` பாஸ் செய்த போது,இருந்த மகிழ்ச்சி கூட இல்லை!.ரேங்க் கார்டை வாங்கும் போது கூட ,வேறு யாரோ ஒருவரின் கார்டை வாங்குவது போலவே இருந்தது.

இந்த நிகழ்வுகளுக்குப் பின் வகுப்பில் எனக்கு ஒரு தனி `மரியாதை`கிடைத்தது...பல நேரங்களில் `மனோகரன்`சாரின் கேள்விகளுக்கு நான் தவறான பதில் சொன்னபோது கூட, அவர் என்னை அடிக்காதது மேலும் ஆச்சர்யமாகவே இருந்தது!. அது மட்டும் இல்லாமல்,வழக்கமாக என்னோடு சுற்றும் கடைசி பெஞ்சு பசங்க..`இவன் நம்ம இனம் இல்லை போல`ன்னு ஒதுங்கியது,ஒதுக்கியது ...மேலும் ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது!


ஒரு கட்டத்தில் இந்த `அறிவுஜீவி(?!) இமேஜ்`எனக்கு ஒரு கூடுதல் அழுத்தத்தையே தந்தது. இப்படியான அழுத்தத்தில் இருந்த ஒரு நாளில் தான் மறுபடியும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தேன்...ஆமாம்,"இனி எந்தக் காலத்திலும் `பிட்டு`அடிப்பதில்லை!"என்ற முடிவுதான் அது!. அதற்கு முக்கிய காரணங்கள்..பிட்டு அடிப்பதில் உள்ள ரிஸ்க்கும்,சிரமங்களும்!...தவிர பிட்டு அடித்து வாங்கிய அதிக `மார்க்கு`..அப்படி ஒன்றும் அதீத மகிழ்ச்சியைத் தராததும் தான்!..
இப்படியான ஒரு முடிவை நான் எடுத்த அந்த நேரத்தில்,வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரோ..அல்லது சக மாணவர்களோ என்னைக் கவனித்து இருந்தால்,ஏன் தலைக்குப் பின்னே ஒரு `ஒளிவட்டத்தை`ப் பார்த்திருக்கக்  கூடும்!
இப்படி ஒரு `ஞானம்`வந்த பிறகு...ப்ளஸ் டூ வில் `ஜுவாலாஜி எக்சாமில்` ஒரு முறை ...`சைபர்`மார்க் வாங்கியபோது,ஜுவாலாஜி ஆசிரியர்...என்னைக் கிண்டலடித்து,விடைத்தாளை  என் கையில் தந்த போது கூட, போது கூட .கவலையில்லாமல்..அவரோடும்...சக மாணவ,மாணவிகளோடும் சேர்ந்து ..`என்னாலும்`சிரிக்க முடிந்தது!..எப்படியும் அடுத்த எக்சாமில் ...பாஸ் செய்துவிடலாம் என்ற,நம்பிக்கை தந்த `தைரியம்` தான் அது!.

தேர்வில் `காப்பி`அடிப்பது ஒருவகை என்றால்..நம்மில் பலர்...சக மனிதர்களைக் `காப்பி`அடிப்பது இன்னொரு வகை!

அப்பா...`ஷேவிங்`செய்து வைத்துவிட்டுச் சென்ற `ரேசரை`எடுத்து.`அப்பா`போலவே தானும் முயற்சி செய்யும் மீசை முளைக்காத பொடியன்....
திரைப்படத்தில் தன் அபிமான நடிகனைப் பார்த்து,தானும் அது போலவே தலையை சிரைத்துக் கொள்ளும் தீவிர ரசிகன்...
பக்கத்து வீட்டுக்காரர்`கார்` வாங்கி விட்டதால்,வீட்டில் நிறுத்த இடம் இல்லாவிட்டாலும்...தானும் அதேபோலக் கார் வாங்கி...ரோட்டில் நிறுத்தும் நபர்!
நண்பரின் மகன் இஞ்சினியரிங் காலேஜில் படிப்பதால்...மார்க்கு வாங்காத தன் மகனையும்..டொனேஷன் கொடுத்துச் சுயநிதிக் கல்லூரியில் சேர்த்து விடும் தந்தை!...
பக்கத்து வீட்டுக்காரி...வாங்கியதைப் போலவே ,பட்டுப் புடவையும்,வைரத் தோடும் வாங்கித் தரும்படி,கணவனை நச்சரிக்கும் மனைவி!
துட்டும்,இலவசத் திட்டங்களும் கொடுத்து ஓட்டு வாங்கும்...அரசியல்வாதியை `ஃபாலோ`செய்யும் சக அரசியல்வாதி!...
ஒருவர்  `சாதிக் கட்சி` ஆரம்பித்தால்...தொடர்ந்து,அதுபோலவே ஆரம்பிக்கப்படும் மற்ற சாதிக் கட்சிகள்!...
தெலுங்கில் ஒரு படம் `ஹிட்`அடித்து விட்டால்..அதை உடனே தமிழில் `காப்பி`அடிக்கும் இயக்குனர்!...
தன் அபிமான எழுத்தாளனைப் பார்த்து...அவனைப் போலவே தாடியும்,ஜிப்பாவும்,தடித்த மூக்குக்கண்ணாடி சகிதமாக..மோட்டுவளையையும்,சக மனிதர்களையும் வெறித்துப் பார்க்கும் தீவிர வாசகன்!..

யோசிக்க யோசிக்க நம்மில் எல்லோரும்,ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு நபரை காப்பி அடித்துத்தான் வாழ்ந்து வருகிறோம் எனப் புரிந்தாலும்...அப்படியே இந்தக் `காப்பி`விஷயம் தொடர்ந்து,ஒரு கட்டத்தில்..அடுத்தவரின் நகலாகவே சில நேரங்களில் ஆகி விடும்போது..நமக்கான அடையாளத்தை நாம் இழந்து விடுகிறோம் என்பதே உண்மை!.

ஒரு விஷயத்தை நீங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்..அடுத்தவர்களை காப்பி அடித்து சிறப்பாக வாழ்ந்தவர்களை விட சீரழிந்தவர்களே இங்கே அதிகம்!


வளமாக,வசதியாக வாழ்பவர்கள் கூட ,ஒருகட்டத்தில் தாங்கள் எதையோ இழந்ததாகவே உணர்கிறார்கள்...உண்மையில் அவர்கள் அவர்களின் `மகிழ்ச்சியை`த்தான் தொலைத்து இருக்கிறார்கள்!.
ஒருகட்டத்தில் இவர்கள் புதிது புதிதாய் முளைக்கும்..ஆசிரமங்களையும்,சாமியார்களையும் தேடி ஓடுகிறார்கள்!. ஆனாலும் பாருங்கள்...பெரும்பாலும்,இவர்கள் தேடிப் போவது என்னவோ..வேறு ஒரு சாமியாரைப் `காப்பி`அடிக்கும் `டூப்ளிகேட்` சாமியார்களிடம்தான்!

உங்களுக்கு உண்மையாக,உங்கள் இயல்பு படி,இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்வதில் இருக்கிறது உண்மையான மகிழ்ச்சி!. 
இதை உங்களுக்கு எந்த ஆசிரமும்,சாமியாரும் கற்றுத் தரவே முடியாது!
நமக்கான வாழ்க்கையை...நாம் நமக்காக வாழும் போது...அந்த வாழ்க்கை ஒரு அழகானதாக,அர்த்தம் உள்ளதாக,உண்மையான மகிழ்ச்சி கொண்டதாக அமைந்து விடுகிறது...இதுபோல ஒரு வாழ்க்கையில் நீங்கள் செய்யும் முட்டாள்தனம்,தவறுகள் கூட...ஒரு மகிழ்ச்சியான,அனுபவ பாடமாகவே அமையும்!


6 comments:

  1. மாப்பி நிசமாவே பிண்ற போ..

    "குவி லென்சாகவும்,குழி லென்சாகவும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் சாதூர்யம்!..இந்தத் திறமையானது,ஒரே நேரத்தில்... தூரத்தில் இருக்கும் `எக்சாமினரை` கவனிக்கவும்,நுணுக்கி எழுதிய பிட்டைப் படிப்பதற்கும் மிகவும் உதவும்!"// செம செம
    இன்னும் சொல்லிட்டே போகலாம் really enjoyed lot .

    பட் "இருந்தால்,உறுதியாகச் சொல்கிறேன் ,நீங்கள் ஒரு அழகான அனுபவத்தை இழந்து விட்டீர்கள்!" இங்க தான் என்னை காலவாரிட்டே #பிட் அடித்ததே இல்லை.இது ஒரு குத்தமாயா ? :-))

    ReplyDelete
  2. பதிவுக்கு நீங்க தேர்ந்தெடுக்கும் போட்டோ தான் எனக்கு அதிகம் பிடிச்சிருக்கு.அந்தக் குறும்பும் யோசனையுமான சிறுவன் புகைப்படம் சூப்பர்!,அடுத்த பதிவுகளில் உங்க காதல் அனுபவங்களையும் எதிர்பார்க்கிறேன் :-)

    ReplyDelete
  3. காப்பி அடித்தது உண்டு ஆனால் பிட் அடித்ததில்லை - ஒரு அழகான அனுபம் போச்சே :-) @shanthhi

    ReplyDelete
  4. உங்களுக்கு எழுத்து நடை நன்று வருகிறது. இன்னும் சிறப்பாக எழுத முயற்சியுங்கள். பிட் அடித்து, பார்டரில் வேண்டுமானால் பாஸ் ஆகலாம். 80 மார்க் வாங்கினீர்கள் என்பதை ஒத்து கொள்ள முடியவில்லை. ஒரு பதிவின் ஓட்டத்துக்கு அடிச்சு விட்டுடீங்களா? பிட்டையும் புலன்களையும் கம்பேர் செய்தது அருமை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஹாஹா...ஏற்கனவே நான் பார்டர்ல பாஸ் ஆகிட்டு இருந்த ஆள்தான்...அதைவிட அதிகமா வாங்கனும்னு வெறி! அதான் அப்படி!...உண்மையில் அந்த எக்சாம்ல என் average 81% .அதைத்தான் அப்படி சொல்லி இருக்கேன்!அதுக்கு நான் செஞ்ச `பிராடு` வேலைகள் ரொம்ப அதிகம்..அதெல்லாம் விவரிச்சா ,மிக நீண்ட பதிவு ஆகிடும்!..,;)

      Delete